தயாரிப்பாளர்கள் சங்க குழப்பம்:அட்டாக் கமிட்டிக்கு கோர்ட் தடை!!
கடந்த ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், துணை தலைவர் உள்ளிட்ட 21 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனையடுத்து இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் 30பேர் கொண்ட அட்டாக் கமிட்டி அமைக்கப்பட்டது. சங்கத்தின் நிர்வாகத்தினை நடத்துவது, செயற்குழு கூட்டம் கூட்டுவது போன்ற பணிகளை இக்கமிட்டி செய்து வந்தது.
மேலும் இந்த கமிட்டி, தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரையும் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் பதவி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்தது.
இந்நிலையில் அட்டாக் கமிட்டியின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கவும், தங்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிப்பு செய்ய வேண்டும் என்று சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பு மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 6-ம் தேதி வரை அட்டாக் கமிட்டி செய்லபடுவதற்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது.
இதனையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் மீண்டும் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறார்கள்.
இதற்காக தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர கூடுதல் ஆணையர் தாமரைக் கண்ணனிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர் அணி தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நுழைவதற்கு எந்த உரிமையும் கிடையாது. அதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அட்டாக் கமிட்டி தலைவர் இப்ராஹிம் ராவுத்தர் கூறியுள்ளார்.
பெப்சி அமைப்போடு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் முன்பு தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
ஆனால் அதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீறினார் என்பதால் பிரச்சினை ஏற்படவே, தயாரிப்பாளர்களிடையே பிளவு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
Producers club issue breaking for attack comity from court.
Filed Under: தமிழ் சினிமா











