மௌனகுரு திரைவிமர்சனம்


இரண்டு படங்களே நடித்த ஹீரோ , புதுமுக இயக்குனர் , கவனிக்க வைத்த ட்ரெய்ளர் தவிர வேறெந்த பெரிய பில்ட் அப்பும் இல்லாமல் தலைப்பிற்கேற்ப மெளனமாக ரிலீஸ் ஆகியிருக்கும் படம் ” மௌனகுரு ” … மெதுவாக ஆரம்பித்து போக போக விரைவாக படத்தோடு நம்மை ஒன்ற வைக்கும் திரைக்கதையே படத்தின் பலம் …

சின்ன அடிதடியால் கல்லூரியில் டி.சி கொடுக்கப்பட்டு மதுரையில் இருந்து அம்மாவுடன் சென்னைக்கு வந்து அண்ணன் வீட்டில் தங்குகிறார் கருணாகரன் ( அருள்நிதி ) … காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணனின் உதவியுடன் வேறு கல்லூரியில் சேர்ந்தாலும் அவருடன் தங்குவதற்கு வழியின்றி விடுதியில் தங்குகிறார் … இதற்கு நடுவில் நான்கு போலிஸ் அதிகாரிகளின் குற்றத்தை மறைக்க பலிகடா ஆக்கப்படுகிறார் … அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே மீதி கதை …

அருள்நிதிக்கு நிச்சயம் இது பெயர் சொல்லும் படம் … படம் நெடுக சாதாரணமாக இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் மிரட்டுகிறார் … அண்ணன் வீட்டில் தங்குவது அண்ணிக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்ததும் நாசூக்காக ஒதுங்குவதிலும் , தனக்கு யாருமே இல்லை என்று சொல்லி இனியாவிடம் வருத்தப்படுவதிலும் , சக மாணவன் வம்பிற்கு இழுக்கும் போது மிரட்டுவதிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் ….

ஹீரோவை போல இனியாவின் கேரக்டர் தெளிவாக செதுக்கப்படாவிட்டாலும் தன் சிம்பிளான நடிப்பால் அதை சமன் செய்கிறார் … இவர் எந்த காரணமுமில்லாமல் அருள்நிதியின் மேல் காதல் வயப்படுவது … படத்தின் வில்லன் மாரிமுத்துவாக ஜான் விஜய் தன்னுடைய அலட்டலை அடைப்பில் போட்டு விட்டு அளவாக , தேவைக்கேற்ப நடித்திருக்கிறார் …

அருள்நிதியின் அம்மாவாக வருபவர் படம் நெடுக இயல்பாக நடித்திருந்தாலும், தன் மகனை மனநிலை சரியில்லாதவன் என்று டாக்டர் விளக்கும் காட்சியில் மிகுந்த சோகத்தை காட்டியிருக்கிறார் …

அருள்நிதியின் அண்ணன் , அண்ணி , கிருஷ்ணமூர்த்தி உட்பட மற்ற இரு போலிஸ் அதிகாரிகள் , கர்ப்பிணி பெண்ணாக வந்து இன்வெஸ்டிகேட் செய்யும் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் உமா ரியாஸ் , விபச்சாரியாக வரும் பெண் , கல்லூரி முதல்வராக வரும் பாதிரியார் , அருள்நிதியுடன் சண்டையிடும் சக மாணவன் , காலேஜ் வார்டன் , மனநிலை சரியில்லாதவராக நடித்திருப்பவர் இப்படி நிறைய பேர் மைனா , எங்கேயும் எப்போதும் வரிசையில் படம் பார்க்கும் போதே மனதில் பதிகிறார்கள் …

படத்தில் பாடல்கள் தமனின் பின்னணி இசை பிரமாதம் … மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு தேவைக்கேற்ப வெளிச்சத்தை கொடுத்து படத்தின் இயல்பு நிலையை தக்க வைக்கிறது … தரணியின் பட்டறையிலிருந்து வந்திருந்தாலும் குருவை போல நாலு பாட்டு, ஐந்து பைட் என கமெர்சியல் ரூட்டில் பயணிக்காமல் முதல் படத்திலேயே சஸ்பென்ஸ் பாணி திரைக்கதையை வைத்து மௌன குருவை தந்ததற்காக சாந்தகுமாருக்கு ஒரு சல்யூட் வைக்கலாம் …

வாய் பேச முடியாதவர்களுடன் உடல்மொழியில் அருள்நிதி பேசுவதற்கு சொல்லப்படும் லாஜிக் ,பாதிரியாரின் பையன் தன் தரப்பு நியாயத்தை சொல்லும் காட்சி , ஹீரோயிசத்தை அளவாக பயன்படுத்திய விதம் , சின்ன சின்ன டிவிஷ்ட்களுடன் படத்தை நகர்த்திய பாங்கு இவற்றிற்காக இயக்குனரை பாராட்டலாம் …

தோற்றத்தில் சாதரணமாக இருந்தாலும் நடவடிக்கைகளில் அசாதாரணமாக இருக்கும் ஹீரோ , ஹீரோ – ஹீரோயின் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் , மருத்துவ கல்லூரி மாணவியாக வரும் இனியா அருள்நிதிக்காக வருத்தப்படுவது இப்படி வித்தியாசமான திரைக்கதை யுக்தியால் புது அனுபவத்தை விரும்பும் ரசிகர்களுக்கு மத்தியில் நிச்சயம் மௌனகுரு – பேசப்படுவான் …


Filed Under: திரை விமர்சனம்

Tags:

Leave a Reply




If you want a picture to show with your comment, go get a Gravatar.

Content Protected Using Blog Protector By: PcDrome.
Easy AdSenser by Unreal